தோல்வியைத் தழுவுகிறதா தனியார் மயக் கல்விக் கொள்கை.
கல்வி வியாபாரமாகப் பார்க்கப்படும் இன்றைய சுழலில் அனைவருக்கும் சமமான கல்வி என்றோ,இந்த நாட்டின் குடிமக்கள் யாவருக்கும் கல்வி கண்டிப்பாய் வழங்கப் பட்டுவிடும் என்றோ நினைத்தால் நம்மைப் போல பைத்தியக்காரர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
இருந்தாலும்,இன்னும் சில நம்பிக்கைகள் நம்மிடம் உண்டு என்பதையும் நாம் இந்த இடத்தில் சொல்லியாக வேண்டியுள்ளது.சமச்சீர் கல்வி,அதை அமல்படுத்துவதில் உள்ள (சிறிது தயக்கம்)அரசின் நிலைப்பாடு போன்றவைகளில் நாம் மாநில அரசை பாராட்ட ஆசைப்படுகிறோம்.
இதனால் மட்டும் இந்த நாட்டில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வந்துவிட முடியுமா?.தொடர்ந்து அக்குழந்தைகளுக்கு இந்த அரசுகள் இலவசமாக கல்வி வழங்கிட முடியுமா?.அப்படியே படித்து முடித்து வந்தாலும் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியுமா?.
எத்தனை அரசு பள்ளிகள்,கல்லூரிகள்,பல்கலை கழகங்கள் இயங்கி வருகின்றன.மாணவர்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்வதில் இந்த அரசுகளின் அக்கறை என்ன?.புதிதாய் கல்வி நிறுவனங்கள் நிறுவி,அதில் மாணவர்களை உருவாக்குவதில், அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி,அவர்களின் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வருவதின் மூலம்,இந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுவர இந்த அரசுகளின் முயற்சி என்ன?.அதில் வெற்றியைப் பெற்றுள்ளார்கள் எனக் கூற முடியுமா?.
அரசுகள் என்பது இந்த நாட்டில் வெறும் பார்வையாளர்களாய் இருந்தால் மட்டும் போதும்.தனியார் நிறுவனங்கள் பல தோன்றி,இந்த நாட்டில் படிப்பறிவு இல்லாதோர்களின் குழந்தைகளுக்கு,ஏழைகளுக்கு,வறுமையில் வாடுவோர் குழந்தைகளுக்கு கல்விக்கண் இலவசமாய் அல்லது சிறு லாபத்தோடு வழங்கும் என்று ஆட்சியாளர்கள் எண்ணுவது சிறுபிள்ளைத்தனம் என்று சொல்வதைத் தவிர வேறென்ன கூறிவிட முடியும்.
இந்தியாவில் உள்ள நூற்று இருபத்து ஆறு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில்
முப்பத்து எட்டு மட்டுமே போதிய அளவு வசதிகளைக் கொண்டு உள்ளதாகவும்,நாற்பத்து நான்கு பல்கலைக் கழகங்கள் மூன்று ஆண்டுகளில் சரி செய்து விடலாம் எனவும்,மீதமுள்ள நாற்பத்து நான்கு பல்கலைக் கழகங்கள் சரி செய்யவே முடியாது என்பதால் அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய டாண்டன் குழுவின் அறிக்கை கூறியிருந்தது.இதில் பதினாறு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தமிழகத்தைச் சார்ந்தது என்பதும்,கட்சி வித்தியாசம் ஏதுமின்றி, முன்னாள் மற்றும் இந்நாள் மத்திய மாநில அமைச்சர்கள் நடத்தும் கல்வி நிலையங்களும் அடக்கம் என்பதும் குறிப்பிட வேண்டியது.
இதை ஏற்றுக் கொள்வதாக நடுவண் அரசு அறிவித்த உடனே, அலறி அடித்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உச்சநீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டி,தற்காலிகத் தடை பெற்றுள்ளன.இத்தனை ஆண்டுகளாக செய்து முடிக்காத இவர்கள் கால அவகாசம் கொடுத்தால்,செய்து முடித்து விடுவதாகக் கோருவதை நம்ப முடிகிறதா?.இவர்களுக்கு ஆதரவாய் இந்த நாட்டின் சட்ட மூளைகள் எனப்படும் நாரிமன்,பராசரன்,தவான் போன்ற வழக்கறிஞர்கள் வாதாடக் கிளம்பி உள்ளதை என்னவென்று சொல்ல முடியும்.
அதே போல் பள்ளிகள் அனைத்தும் ஆண்டு தொடக்கத்தில் மட்டுமே மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவு காற்றில் பறப்பதை பத்திரிக்கைகளில் காண்கிறோம்.இவை யாவும் எதைக் காட்டுகின்றன?.
கல்வியில் தனியார்மயம் என்பது இந்த நாட்டின் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியைத் தராது என்பதும்,கல்வி என்பது வியாபாரப் பொருளாய் மாற்றுவதற்கே இது உதவும் என்பது தெளிவானது.இருந்தும் இந்த அரசுகள் கல்வியில் தனியாரை ஊக்குவிப்பது சரியான செயல் அல்ல என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகின்றன?.
Friday, 29 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அங்கீகாரம் ரத்து செய்யப் படும் 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் ராமச்சந்திரா நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சில மாதங்களுக்கு முன், ஜெகதரட்சகனின் கல்லூரியும், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியும், அட்மிஷனுக்கு பணம் பெற்ற விவகாரத்தை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டது. மருத்துவ மேல்படிப்புக்கு பணம் பெறுவதை விடவா ஒரு பல்கலைக்கழகம் தவறு செய்ய வேண்டும்?
இதையும் தாண்டி, ராமச்சந்திரா 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் வராததற்கு காரணம் கருணாநிதியின் இல்லாத முதுகுத் தண்டுக்கு அறுவை சிகிச்சை செய்த மாயம் அல்லாமல் வேறு என்ன ?
நன்றி சவுக்கு அவர்களே.நீங்கள் சொன்னதும் சரிதான்.இதற்கெல்லாம் தீர்வு தான் தெரியவில்லை.மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படாத வரையில் இவைகள் தொடரும் என்பதே காட்சியாக உள்ளது.
Post a Comment