Thursday, 24 June 2010

இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

இன்னும் கொஞ்சம் வேண்டுமா?.

என் இனிய இந்திய பெருமக்களே.அரசியல்வாதிகள் கொடுக்கிற அல்வா போதாது என்று இவர்களும் (முதலாளிகள் தாங்க) இறங்கி விட்டனரே.சமீப காலமா இவங்க கொடுக்கிற அல்வா இருக்குங்களே.தாங்க முடியலீங்க.

வடிவேலு பாணியில் சொன்னால் 'என்ன நடக்குது இங்க' னு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.

சமீபத்தில் பத்திரிக்கைச் செய்தியில் கீழே வந்த செய்தியை படித்த எனக்கு தலை சுற்றுகிறது.நீங்களும் அதை படியுங்கள்.

பெங்களூரை சேர்ந்தவர் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. மதுபான நிறுவனத்தின் உரிமையாளர். இவருக்கு சொந்தமாக விமான நிறுவனம், ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி ஆகியவை உள்ளன. இத்தொழில்கள் மூலம், கோடிகளை வருமானமாக குவித்துள்ளார். சமீபத்தில் ராஜ்யசபா எம்.பி.,யாக இவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அவர் மனுதாக்கல் செய்யும்போது, தனக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த விவரங்களையும் தேர்தல் அதிகாரியிடம் அறிக்கையாக தாக்கல் செய்தார். அதில், ஆச்சர்யம் அளிக்கும் வகையில், தனக்கு சொந்தமாக சிறிதளவு நிலம் கூட இல்லை என அவர் கூறியுள்ளார்.

இது மட்டுமல்லாமல், "என் பெயரிலோ, என் மனைவி பெயரிலோ, அல்லது என் இரு மகள்கள் லீனா, தான்யா பெயரிலோ நிலமோ, வீடோ எதுவும் இல்லை' என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும், இவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தனக்கு 615 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதில், கையிருப்பு ரொக்கமாக 9,500 ரூபாயும், எல்.ஐ.சி., பாலிசி மூலமாக 13.50 லட்ச ரூபாயும், பங்கு பத்திரங்கள் மூலமாக 591.65 லட்ச ரூபாயும் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 4.48 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டிலே ஒரு அடி பூமி கூட இல்லைங்கிறது நம்பும்படியாக இருக்கு.அப்படியே இல்லைன்னு வச்சுகிட்டாலும் அவருக்கு எதுக்குங்க எம்.பி பதவி?.

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சுயேச்சையான அவருக்கு,கட்சி மாறி வாக்களித்து வெற்றி பெற வைத்து உள்ளதை நினைச்சாலே,அவர்களோட(மக்களுக்கு தொண்டு செய்யணும் என்ற எண்ணம்)நல்லாவே நமக்கு புரியுது.

அப்படியே எந்த எந்த நாட்டிலே எவ்வளவு பூமி இருக்குங்கிற கணக்கையும் கொடுத்து இருந்தா நல்லா இருந்திருக்கும்.

இனிமேல் தேர்தல் கமிசன் இந்த கேள்வியையும் கேட்டா நல்லாயிருக்கும்.ஏன்னா இப்ப எல்லாம் நம்ம ஆளுங்களுக்கு நம்ம நாட்டைவிட வெளி நாட்டிலே தான் சொத்து அதிகமா இருக்கிறதா கேள்வி.

இந்த காமெடிக்கு எல்லாம் முடிவே இல்லையா?.

Monday, 21 June 2010

ஜல்லிக்கட்டு

பராசக்திக்கு கடிதங்கள். நியாயம் தானா தலைவரே ?

பராசக்திக்கு கடிதங்கள். நியாயம் தானா தலைவரே ?

முதல்கட்ட அரசு கேபிள் "டிவி' ஒளிபரப்பு சேவையைத் துவக்கி வைத்து, அரசு ஏற்பாடு செய்த விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

ஜூலை 15ம் தேதி அரசு கேபிள் "டிவி' நிறுவனம் சேவைகளைத் துவங்கும் என்று அறிவித்திருந்தேன். பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும், சொன்னபடி சொன்ன நாளில் அப்பணிகள் இன்று துவங்கப்படுகின்றன. மத்திய அரசின் அனுமதி, ஏப்ரல் 2ம் தேதி தான் கிடைத்தது. நான்கு மாத குறுகிய காலத்திற்குள் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, உலகப் புகழ்மிக்க நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, தரம் வாய்ந்த இயந்திரங்களைக் கொள்முதல் செய்து, பன்னாட்டு நிபுணர்களைக் கொண்டு நிறுவி, இன்று சேவை துவங்கப்படுகிறது. இது ஒரு சாதனை.
வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்திற்காக அல்ல; பொதுமக்களுக்கு நியாயமான கட்டணத்தில் தரமான சேவைகளை வழங்கும் நோக்கத்தில் தான் இந்நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. இதுவரை, பொதுமக்கள் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு 150 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்தனர். ஒவ்வொரு ஊரிலும் தனித்தனி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. சில எம்.எஸ்.ஓ.,க்கள் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களிடம் இருந்து கணிசமான தொகையை வசூலித்து லாபம் சம்பாதித்து வந்தன.

இதில் ஏராளமான புகார்களும், முரண்பாடுகளும் தொடர்ந்து வந்ததால் அரசே மக்களுக்கு உதவ, இந்நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.இது ஒரு புதிய திட்டம். எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. உலக அளவில் செயல்படுத்தப்படுகிறதா என்பதும் கேள்விக்குறி. இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்ய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. மாநிலம் எங்கும் ஒரே கட்டணமாக 100 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 16- 2008- இல் தினமலர் செய்தி.

இந்த நிறுவனத்தை தலைமையேற்று நடத்திய தமிழக ஐ ஏ எஸ் அதிகாரி உமாசங்கர் அவர்களின் தற்போதைய நிலை என்னெவென்று தெரியுமா?.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதா வது:

தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1991-ம் ஆண்டு பதவியேற்றேன். பதவி ஏற்றது முதல் எந்தவிதப் புகாருக்கும் ஆளாகாமல் நேர்மையாகப் பணியாற்றி வருகிறேன். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக 2008, அக்டோபர் 30-ம் தேதி நியமிக் கப்பட்டேன். சன் டி.வி. குழு மத்துக்குச் சொந்தமான சுமங் கலி கேபிள் டி.வி. நிறுவனம், அரசு கேபிள் டி.வி. நிறுவ னத்தை முடக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டது.

இந்த முயற்சிகளில் இருந்து அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டேன். சுமங்கலி கேபிள் நிறுவனத் தின் சட்ட விரோத நடவடிக் கைகளையும் அரசின் கவனத் துக்குக் கொண்டு வந்தேன். சுமங்கலி கேபிள் நிறுவ னத்தை தேசியமயமாக்குவ துடன், அமைச்சர் ஒருவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தேன். இதையடுத்து, சிறுசேமிப்புகள் துறை ஆணையராக நான் பணியிடமாற்றம் செய்யப்பட் டேன். இப்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செயலிழந்து காணப்படுகிறது. சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசிய மயமாக்க வேண்டும் என்று பரிந்துரைத்த காரணத்தால், என் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடங் கப்பட்டது. சட்ட விரோதமான இந்த ஒழுங்கு நடவடிக் கைக்கு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து, வரு மானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி ஊழல் தடுப்பு காவல்துறை அதிகாரி ஒருவர் என்னிடம் விசாரணை நடத்தினார். ஆனால், என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் அவ்வப் போது எனது சொத்து விவரங் களை அரசிடம் சமர்ப்பித்து வருகிறேன். என் மீது விசா ரணை நடத்துவதற்கு சட்டப் படி அனுமதியும் பெறப்பட வில்லை. நேர்மையாகவும், பொதுமக்களுக்கு நன்மை தரும் வகையிலும் செயல்பட்ட தால் என் மீது களங்கம் கற்பிக் கும் வகையில் இந்த விசா ரணை மேற்கொள்ளப்படு கிறது. ஊழல்வாதிகளையும், அதிகாரம் மிக்கவர்களையும் காப்பாற்றும் அரசு, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததால் என்னை பழிவாங்குகிறது.

வருமானத்துக்கு அதிகமா கச் சொத்து சேர்த்ததாக போது மான ஆதாரங்கள் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நட வ டிக்கை எடுக்கலாம். ஆனால், விசாரணை என்ற பெயரில் என் மீதும், எனது குடும்பத்தி னர், நண்பர்கள் மீதும் காவல் துறையை ஏவி விட முடியாது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு வில் கோரப்பட்டது. இந்த மனு, நீதிபதி வி.தனபாலன் முன்னி லையில் விசாரணைக்கு வந் தது. இதுதொடர்பாக, தமிழக அரசு ஜூன் 28-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீதான ஊழல் தடுப்பு காவல்துறை யினரின் விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று நீதி பதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புவதெல்லாம் இது தான் தலைவரே.

ஒரு அரசு அலுவலர்,அரசாங்கம் தனக்கு இட்ட வேலையை செய்வது அவரின் தார்மிகக் கடமை அல்லவா?.அதுவும் ஒரு அரசின் சாதனைத் திட்டம் என்று முதல்வரே அறிவிக்கும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற திட்டத்தை செயல்படுத்தியது குற்றமா தலைவரே?.

அந்த நிறுவனத்தை சிறப்பாக செயல்பட,தடைக் கற்களை அகற்ற அவர் செய்த முயற்சிகள் தவறா தலைவரே?.

ஒரு நேர்மையான அதிகாரி நீதிமன்றம் வரை வந்து தான் தன் கௌரவத்தை காப்பாற்ற வேண்டுமா?.அத்தகைய ஆட்சியைத் தான் தாங்கள் நடத்திக் கொண்டுள்ளீர்களா?.

இந்த நாட்டின் உயர்ந்த பரிசுப் பணியில் உள்ளவர்களுக்கே இந்த கதி என்றால் சாமானிய அரசு ஊழியர்கள் கதியை நினைத்தால் ???.

உங்களுக்கு மட்டும் தான் பழைய செய்திகள் நியாபகத்திற்கு வரும் என்றில்லை.எங்கள் மனதிலும் பராசக்தியின் கோர்ட் வசனங்கள் நியாபகத்திற்கு வருகிறதே தலைவரே?.

உங்கள் குடும்ப சண்டைக்கு இன்னும் எத்தனை எத்தனை தலைகள் உருளப் போகிறதோ என நினைக்கும்போது உண்மையிலேயே பயமாக இருக்கிறது தலைவரே?.

உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.குடும்பம்னு ஒன்னு இருந்தால் சண்டைகள் வர்றது சகசம் தான்.அதுக்காக பொது மக்களையோ அரசு ஊழியர்களையோ பழி வாங்க வேண்டாம்னு குடும்பத்துலே சொல்லி வையுங்க தலைவரே?.

நீங்க நாளைக்கு சேர்ந்துக்கலாம்.போற உயிரும்,அப்பாவிகள் அனுபவிக்கிற கஷ்டமும் வார்த்தையிலே சொல்ல முடியாது தலைவரே?.

தயவு செய்து உங்களிடம் நாங்கள் கேட்டு கொள்வதெல்லாம்,உங்கள் குடும்ப சண்டைக்கு அரசின் நிதியை விரயமாக்கி,அரசு எந்திரத்தின் உழைப்பை வீணாக்குவதை நிறுத்துங்கள் தலைவா.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தானே வரும். என்று
உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் தான் சொல்லணும் தலைவரே.

Saturday, 19 June 2010

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Monday, 1 February 2010

இயற்கையை புசி. தாயை நேசி.


தேடுவாய் நீ மானிடா..!


மானிடா !
எதைத் தேடுகிறாய் -அதுவும்
எங்கே தேடுகிறாய்?

எங்கிருந்து வந்தேன்
எங்கே செல்வேன்-தெரிந்து
என்ன பயன்-அதற்காய்
அலைவதற்கா இந்த மானிட பிறப்பு.

இல்லாத ஊருக்கு
செல்லாத வண்டியை-செலுத்த
நினைத்து மனிதா
ஏனிந்த ஓட்டம் !

கண்ணுக்குள் வலையை கட்டி
கனவுலகில் வாழ்கிறாய்.
அமாவாசையில் பௌர்ணமி தேடி
ஆடி அலைகிறாய் !

கட்டிலிலும் கரன்சியிலும்
புரள்வதால் மட்டும்
நிறைந்து விடுமா?
இந்த மானுட வாழ்க்கை.

இந்த பூமிக் கல்லறையில்
மண்ணுக்கும் மதுவுக்கும்
பொன்னுக்கும் பெண்ணுக்கும்
கேடாய் அலைந்தான் என்றா
உன் சரித்திரம்
நாளை சொல்லப்பட வேண்டும்.

கடவுளைத் தேடி
கன தூரம் ஓடுகின்றாய்
காசைக் கொடுத்து
கணக்காய் திரும்புகின்றாய்

படைப்பவன் பிரம்மன்
எனில்-உனைப்
படைத்தவள் தாய் தானே?

நினைவில் கொள்ள
நீ மறந்ததால் தானே
"முதியோர் இல்லங்கள்"

உனக்கு முன்னே
ஓராயிரம் இன்பங்கள்-நீ
உணர்ந்து கொண்டுள்ளாயா?

கரன்சிக்காக வீணாக்கும்
காலத்தையும்,இளமையையும்
கணக்கெடுத்துப் பார்
கதை புரியும் உனக்கு..!

வாழ்க்கையோடு வாழாமல்
வாழ்க்கையை
வா.ழ்.ந்.து....பார்..!


வலி தெரியும்.
வாலிபம் புரியும்.
வானமும் உனக்கு வசப்படும்.

அன்பைத் தேடு.
அரவணைத்து வாழ்.

இயற்கையை புசி.
தாயை நேசி.
இன்புற்று வாழ்வாய்.

அந்த நாள் வராதோ...

மாண்புமிகுக்களே...!


நேற்று வரை நீங்கள்
அரசனாய் ...
அரிதாரம் பூசிக் கொண்டு.

மறந்தும் கூட
மக்களை (உங்கள் வாரிசுகளை அல்ல )
நினைக்கவில்லை.

திக்கெட்டும் தோரணங்கள் ..
தெருவெல்லாம் பஜனைகள்...
உலகே உங்களுக்கு எனும்
ஒப்பாரிக் கூட்டங்கள்.

இந்தியாவில்
நீங்கள் விட்டு வைத்தது
இமயமலையும் தாஜ் மகாலையும் தான்.

தண்ணீருக்கும் ரேசனுக்கும்
நாங்கள் தவித்திருக்க
உங்களின் வெளி நாட்டுச் சொத்து
விக்டோரியா ராணிக்கும் மேல் !

ஜனநாயகச் சாம்பலை
பூசிக்கொண்டு நீங்கள்
சர்வாதிகாரிகளாய் ...

அரிதாரம்
'ஐந்து ஆண்டுகள்' மட்டுமே
என்பதை மறந்தே போனீர்கள் !

விளைவு ?

நீதி தேவதையின்
வாசலில் நெருக்கியபடி
முன் ஜாமீன் கேட்டு
முதல்வர் முதற்கொண்டு..

உங்களுக்குக் கிடைக்கும்
தண்டனைகள் அடுத்து வரும்
மாஜிக்களுக்குப் பாடமாக அமையட்டும்.

தண்டனைச் சிறையில்
அவமானச் சேற்றில் சிக்கி
உங்களின் அகங்காரமும்
ஆணவமும் அழிந்து படட்டும்.

அந்த நாள்
விரைவில் வராதோ....?.

Sunday, 31 January 2010

நான்கு வரியில் கவிதைகள்


நான்கு வரியில் கவிதைகள்

என் வீட்டின்
வறுமை
எனது செருப்பில் தெரிகிறது
பல்லை இளித்துக் கொண்டு.



நண்பனைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
நாலு காசு கொடுத்து வாங்குங்கள்
நச்சென்று புரியும்
நண்பன் தானா என்று.


ஊஞ்சலில்
நீ ஆடுகிறாய் உற்சாகமாய்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
என் உயிர் ஊசலாடுவதை.


கால் முளைத்த
நந்தவனம் என் கண்ணருகில்
எனை கடந்து செல்வது போல்
நீ நடந்து போகிறாய்.

ஜல்லிக்கட்டு பார்க்கலாமுங்களா.!

சகலமானவர்களுக்கும் வணக்கம்.
நான் மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சார்ந்தவன்.சென்ற ஆண்டு எனது ஊரில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை உங்களுக்கு காட்சிப் படுத்தியுள்ளேன்.புடிச்சு இருந்தா பாராட்டுங்க.அன்புடன் உங்கள்....

இது சாதாரணமாக வீட்டில் அதன் கட்டுத்துரையில் கட்டியிருக்கும் காட்சி.வருஷம் முழுதும் இப்படி கட்டிய இடத்திலேயே உணவு,நீர் எல்லாமே அதற்கு கிடைக்கும்.தை பொறந்த பின் அதற்கு வேலை வந்துடும்.எப்படின்னு நினைக்கிரிங்களா.? கீழே வாங்க.
ஜல்லிக்கட்டு பற்றி தெரியாதவர்களுக்கு கொஞ்சமா விளக்கம் தாரேனுங்கோ.
இந்த படம் காளையை கயிறை அவுத்து விடுற காட்சிங்கோ.

வாடி வாசலை விட்டு வெளியே வந்த காளை ஒன்று யாராவது என் அருகிலே வாங்களேன் அப்படின்னு கூப்புடுற மாதிரி தெரியுதுங்களா.
இந்த மாதிரி ஒரு காட்சியை பார்ப்பதற்கு தானுங்க அந்த காளைக்கு சொந்தக்காரர் பல ஆயிரங்களை செலவழித்து,பல சிரமங்களுக்கு இடையிலே ஜல்லிக்கட்டுக்கு இந்த காளையை கொண்டு வந்து சேர்க்கிராருங்க.


இவரு ரொம்ப அமைதியானவருங்க.ஆனா பக்கத்தில யாரும் வந்தா இவருக்கு பிடிக்கிறது இல்லிங்க. ரொம்ப நல்லவருங்கோ இவரு.









சரியான சண்டியர் இவருங்க, பார்த்தாலே தெரியுதுங்களா.

குறும்பு அதிகமுங்க.




இவரு எப்பவுமே நாலு கால் பாய்ச்சல் தானுங்க.எதிரே யாரும் நிக்கமுடியாதுங்க.அவ்வளவு வேகம்.




அருமையா காளையை அடக்கிற காட்சி பாருங்களேன்.சரியான சண்டியர் இவருங்க
பிடிச்சு இருந்தா சொல்லுங்க.இன்னும் கொஞ்சம் பதிவிடுறேன்.
ரொம்ப நன்றிங்க.வந்து போனதுக்கு தாங்க.

Friday, 29 January 2010

தோல்வியைத் தழுவுகிறதா

தோல்வியைத் தழுவுகிறதா தனியார் மயக் கல்விக் கொள்கை.

கல்வி வியாபாரமாகப் பார்க்கப்படும் இன்றைய சுழலில் அனைவருக்கும் சமமான கல்வி என்றோ,இந்த நாட்டின் குடிமக்கள் யாவருக்கும் கல்வி கண்டிப்பாய் வழங்கப் பட்டுவிடும் என்றோ நினைத்தால் நம்மைப் போல பைத்தியக்காரர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

இருந்தாலும்,இன்னும் சில நம்பிக்கைகள் நம்மிடம் உண்டு என்பதையும் நாம் இந்த இடத்தில் சொல்லியாக வேண்டியுள்ளது.சமச்சீர் கல்வி,அதை அமல்படுத்துவதில் உள்ள (சிறிது தயக்கம்)அரசின் நிலைப்பாடு போன்றவைகளில் நாம் மாநில அரசை பாராட்ட ஆசைப்படுகிறோம்.

இதனால் மட்டும் இந்த நாட்டில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வந்துவிட முடியுமா?.தொடர்ந்து அக்குழந்தைகளுக்கு இந்த அரசுகள் இலவசமாக கல்வி வழங்கிட முடியுமா?.அப்படியே படித்து முடித்து வந்தாலும் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியுமா?.

எத்தனை அரசு பள்ளிகள்,கல்லூரிகள்,பல்கலை கழகங்கள் இயங்கி வருகின்றன.மாணவர்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்வதில் இந்த அரசுகளின் அக்கறை என்ன?.புதிதாய் கல்வி நிறுவனங்கள் நிறுவி,அதில் மாணவர்களை உருவாக்குவதில், அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி,அவர்களின் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வருவதின் மூலம்,இந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுவர இந்த அரசுகளின் முயற்சி என்ன?.அதில் வெற்றியைப் பெற்றுள்ளார்கள் எனக் கூற முடியுமா?.


அரசுகள் என்பது இந்த நாட்டில் வெறும் பார்வையாளர்களாய் இருந்தால் மட்டும் போதும்.தனியார் நிறுவனங்கள் பல தோன்றி,இந்த நாட்டில் படிப்பறிவு இல்லாதோர்களின் குழந்தைகளுக்கு,ஏழைகளுக்கு,வறுமையில் வாடுவோர் குழந்தைகளுக்கு கல்விக்கண் இலவசமாய் அல்லது சிறு லாபத்தோடு வழங்கும் என்று ஆட்சியாளர்கள் எண்ணுவது சிறுபிள்ளைத்தனம் என்று சொல்வதைத் தவிர வேறென்ன கூறிவிட முடியும்.

இந்தியாவில் உள்ள நூற்று இருபத்து ஆறு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில்
முப்பத்து எட்டு மட்டுமே போதிய அளவு வசதிகளைக் கொண்டு உள்ளதாகவும்,நாற்பத்து நான்கு பல்கலைக் கழகங்கள் மூன்று ஆண்டுகளில் சரி செய்து விடலாம் எனவும்,மீதமுள்ள நாற்பத்து நான்கு பல்கலைக் கழகங்கள் சரி செய்யவே முடியாது என்பதால் அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய டாண்டன் குழுவின் அறிக்கை கூறியிருந்தது.இதில் பதினாறு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தமிழகத்தைச் சார்ந்தது என்பதும்,கட்சி வித்தியாசம் ஏதுமின்றி, முன்னாள் மற்றும் இந்நாள் மத்திய மாநில அமைச்சர்கள் நடத்தும் கல்வி நிலையங்களும் அடக்கம் என்பதும் குறிப்பிட வேண்டியது.

இதை ஏற்றுக் கொள்வதாக நடுவண் அரசு அறிவித்த உடனே, அலறி அடித்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உச்சநீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டி,தற்காலிகத் தடை பெற்றுள்ளன.இத்தனை ஆண்டுகளாக செய்து முடிக்காத இவர்கள் கால அவகாசம் கொடுத்தால்,செய்து முடித்து விடுவதாகக் கோருவதை நம்ப முடிகிறதா?.இவர்களுக்கு ஆதரவாய் இந்த நாட்டின் சட்ட மூளைகள் எனப்படும் நாரிமன்,பராசரன்,தவான் போன்ற வழக்கறிஞர்கள் வாதாடக் கிளம்பி உள்ளதை என்னவென்று சொல்ல முடியும்.

அதே போல் பள்ளிகள் அனைத்தும் ஆண்டு தொடக்கத்தில் மட்டுமே மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவு காற்றில் பறப்பதை பத்திரிக்கைகளில் காண்கிறோம்.இவை யாவும் எதைக் காட்டுகின்றன?.

கல்வியில் தனியார்மயம் என்பது இந்த நாட்டின் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியைத் தராது என்பதும்,கல்வி என்பது வியாபாரப் பொருளாய் மாற்றுவதற்கே இது உதவும் என்பது தெளிவானது.இருந்தும் இந்த அரசுகள் கல்வியில் தனியாரை ஊக்குவிப்பது சரியான செயல் அல்ல என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகின்றன?.

Sunday, 24 January 2010

என்னைப் பார்த்தா கேட்கிறாய் ?

என்னைப் பார்த்தா கேட்கிறாய் ?


இதயமில்லாதவனே என்று
என்னைப் பார்த்தா
கேட்கிறாய் ?


பனி மலராய்
என் இதயம் எடுத்து
உன் பாதத்தில் சமர்ப்பித்தேன் !

நீயோ...
கசாப்புக் காரனைப்போல்
வெட்டி நொருக்கி
வீதிக்கே பந்தி இட்டாய்.

இப்பொழுதும்
நீயே கேட்கிறாய்.
எனைப் பார்த்து
இதயமில்லாதவனே என்று.!


யாருக்குப் புரிகிறது
காத்திருப்பின் அவஸ்தைகள்

புரியும் வரை
நாம்
பொறுத்திருப்போம் நிலவே...!

வேண்டும் மீண்டும் ஓர் சுதந்திர போர்



வேண்டும் மீண்டும் ஓர் சுதந்திர போர்


வேண்டும்.!
மீண்டும் ஓர் சுதந்திர போர்।

அடிமைத் தனத்தை எதிர்த்து
மதத்தின் பெயரால்
மனித உயிர்கள் பலியாவதை எதிர்த்து
சாதியின் பெயரால்...
இனத்தின் பெயரால்....
உழைப்பாளி மக்களைச் சுரண்டிடும்
ஊழல் வாதிகளை எதிர்த்து
வேண்டும்
மீண்டும் ஓர் சுதந்திர போர்.

சொந்த நாட்டிலே
அன்னியரைப்போல்-எம்
தொழிலாளிக்கு எந்த
உரிமையும்
கிடையாதாம் -
உழைக்க
மட்டும் தான் உரிமையாம்।

ஒன்றுபட-
உரிமைகளைக் கேட்க
உரிமையே கிடையாதாம்.

கொக்கரிக்கிறது
ஆட்சியாளர்களுடன் சேர்ந்து கொண்டு
அந்நிய நிறுவனங்கள்.

தொழிலாளி வர்க்கம்
பெற்ற உரிமைகள் யாவும்
சேவித்துப் பெற்றதில்லை.
யாரிடமும்....
சேவகம் புரிந்தும் பெற்றதில்லை.


பெற்ற உரிமைகள் யாவும்
உழைக்கும் வர்க்கம்
உதிரம் மட்டுமல்ல-பல
உயிரையும் கொடுத்துப் பெற்றதாகும்.


உரிமை காத்திடவே
ஓராயிரம் சிறை நிரப்புவோம்.

செங்கொடி கரங்கள் உயர்ந்தே
உங்கள் செயலைத் தடுத்திடும்.


உண்மைகளை உரைத்தே
மக்கள் சக்தி திரட்டிடும்-எம்
இயக்கம் வெற்றி பெற்றிடும்.


மீண்டும் ...
ஓர் சுதந்திரப் போரில்
உழைக்கும் வர்க்கம் உரிமை பெற்றிடும்.

Saturday, 23 January 2010

இங்கல்ல.டெல்லியில்..தமிழும் என் தமிழனும்

என் இனிய தமிழ் நெஞ்சங்களே.எனக்கு நேர்ந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.அனுமதி கொடுப்பீங்களா?.

எனது இந்திய நாட்டின் தலைநகரம் டெல்லி.
நாள்:1.3.2006.நேரம் நண்பகல் 12.00 மணி.எனது சிறு வயதிலிறிந்து தொலைக்காட்சி,பத்திரிக்கை போன்றவற்றில் பார்த்த,படித்த இந்தியா கேட் சாலை.

ஒவ்வொரு சுதந்திர,குடியரசு தினத்தன்றும் மிடுக்கான ராணுவ வீரர்களின் அணிவகுப்பு,நம் நாட்டின் கலாச்சார,பண்பாட்டை விளக்கும் நடனங்கள்,நாட்டின் பாதுகாப்புக்கு சாட்சியாய் கவச வாகனங்கள்,பீரங்கிகள் என இவற்றைக் காண தவமிருந்த நாட்கள் பலவுண்டு.

அந்த இந்தியா கேட் சாலையில் நானும் எனது நண்பர்கள் நான்கு பேரும் மேலே கூறிய நாளில் மதிய வேளையில்.

எங்கோ தென்கோடியில் சிறு குக்கிராமத்தில் பிறந்து (பக்கத்தில் உள்ள மதுரைக்குத் தனியாகச் சென்றதே +1 படித்த போது தான்) படித்து வளர்ந்த எனக்கு இந்த நிகழ்வு எத்தகைய மகிழ்ச்சியை,கிளர்ச்சியை எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் என்பதை இங்கு எந்த வார்த்தைகளிலும் வெளிப்படுத்த என்னால் முடியாததால் தயவு செய்து எனக்காக நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நாங்கள் டெல்லிக்குச் சென்றது சுற்றுலாவுக்காக அல்ல.எங்களது தொழிற்சங்கம் பாராளுமன்றம் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவே சென்று இருந்தோம்.ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு,அப்படியே ஒரு சுற்று வரும் போது தான் இந்தக் கட்டுரை தொடங்குகிறது.

அந்த மதிய வேளையில் இந்தியா கேட் சாலையில் நடந்து செல்வோர் எங்களைத் தவிர யாருமில்லை.இருபக்கமும் உள்ள கான்கிரிட் தூண்கள்,சங்கிலித் தடுப்புகளைத் தடவிக் கொண்டே அன்ன நடை என்பார்களே ..அது போல் நடை போட்டுக்கொண்டிருந்தோம்.

(இங்கே எங்களைப் பற்றிக் கூறியாக வேண்டும்.எங்களில் யாருக்கும் இந்தி எழுதவோ,படிக்கவோ,பேசவோ தெரியாது.ஆங்கிலமும் கூட பேச வராது.யாமறிந்த மொழிதனிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் இல்லை என தமிழ் மட்டுமே அறிந்த தமிழர்கள் என்பதை எங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.)

அப்பொழுது எங்களுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல்.அதுவும் தமிழில்.எங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.ஏய்.நம்மாளுட....இது நாங்கள்.
நான் நினைச்சேன்.இந்த வெயிலுல இப்படி பைத்தியக்காரன மாதிரி நடக்கிறவனுங்க நம்மாளுங்கலாத்தான் இருப்பானுங்கன்னு நினைச்சேன்.இது அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்.

அவர் எங்களைப் பார்த்து பைத்தியக்காரனுங்க எனக் கூறியது கூட எங்களுக்கு உரைக்கவில்லை.நமது ஆளை அந்த இடத்தில் பார்த்த சந்தோசம் தான் எங்களுக்குப் பெரியதாக இருந்தது.

பரஸ்பர விசாரிப்புகள்.நீங்க எங்கே இருந்து வர்றிங்க, எதுக்கு வந்தீங்க ,இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க ? இது அவர். அண்ணா ,நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ,எத்தனை வருசமா இருக்கீங்க,குடும்பம் எல்லாம் இங்க தான் இருக்காங்களா?.இதெல்லாம் நாங்கள்.

மதுரை மாவட்டம்,தேனி சொந்த ஊர்.அவர் போலீஸ் துறையில் இருப்பதாகவும்,
பத்தொன்பது ஆண்டுகளாக டெல்லியில் பணிபுரிவதாகவும் கூறினார்.

அதற்கு மேல் அவர் கூறியது தான் இங்கு இந்தக் கட்டுரை எழுத என்னைத் தூண்டியது. அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன்.

நம்மள மாதிரி முட்டாள்  பயலுங்க யாருமில்லே.இந்தியே கூடாதுன்னு சொல்லிக்கிட்டு திரியுற கருணாநிதி பேச்சை கேட்டு இந்தி படிக்கததாலே இங்க எத்தனை சிரமம் தெரியுமா?.ஒருமுறை பதவி உயர்வுக்கு தேர்வு எழுத வேண்டும்.நான் ஆங்கிலத்தில் எழுதியிருந்தேன்.அதைப் படித்துப் பார்த்த அதிகாரி வெள்ளைக்காரனுங்க தான் போயிட்டானுங்கள்ளே.இந்த .........மகனுங்க இன்னும் இங்கே ஏண்டா இருக்கானுங்க( சில வார்த்தைகள் எழுத முடியவில்லை) அப்படின்னு என் முன்னாடியே கூறினார்.இப்படி இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் ....சொல்லிக்கொண்டே போகலாம்.என்னை விட இளையவர்கள் எல்லாம் பதவி உயர்வில் சென்றுவிட்டார்கள்.அதற்கு காரணம் இந்தி....தான்.

இதற்கெல்லாம் காரணமான கருணாநிதியோ தன் பேரனை மட்டும் இந்தி படிக்க வச்சு இங்கே வந்து ஆட்டம் போடவிட்டுருக்காரு.நீங்களாவது புரிஞ்சுக்கங்க. நம்ம தலைமுறை போனாலும் பரவாயில்லே.நம்ம குழந்தைங்களாவதுஇந்தி படிக்க ஏற்பாடு செய்யுங்க.இப்படி பேசிவிட்டு சும்மார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் எங்களுடன் உட்கார்ந்து பேசிவிட்டு,வேலைக்குச்  செல்லவேண்டும்.நேரமாகி விட்டது.எனக் கூறிச் சென்றார்.அவரை நாங்கள் மீண்டும் சந்திக்கவில்லை.ஆனால் அவர் கூறிய வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டே உள்ளது.

அவர் கூறிய வார்த்தைகள் சரிதானா...?.நாம் (இந்தி படிக்காததால் அதிகமாக இழந்து உள்ளோமா?.அது எப்படி.
தமிழை மட்டும் கற்று நாம் தமிழ் மொழியை வளர்த்திருக்கிறோமா.?ஆம்.தமிழ் வளர்ச்சியடைந்து உள்ளது என்றால் ...எவ்வாறு?.

சுமார் நாற்பது ஆண்டு கால திராவிட ஆட்சியில் தமிழ் எத்தகைய வளர்ச்சி பெற்றுள்ளது.

கணிப்பொறியில்...அறிவியலில்... பள்ளி கல்லூரிகளில் தமிழைக் கொண்டு  வருவதில் எத்தகைய சாதனை புரிந்துள்ளோம்..?.

நம் மனதுக்கு நிறைவானதாக இது உள்ளதா?.

இல்லை எனில் ஏன்.?.இதற்க்கு எது தடையாக உள்ளது?.

ஆட்சி அதிகாரம் அனைத்தும் இருந்தும் இவற்றில் எல்லாம் தமிழைக் கொண்டு வருவதில் தடையாக இருந்தது எது.?.இவர்கள் முயன்று இருந்தால் முடிவடைந்திருக்காதா?.

தமிழ்..தமிழ்..என தமிழுக்காக தன் இன்னுயிரையே இழந்த பல தீரர்களின் சாம்பலில் ஆட்சிக்கு வந்தவர்கள் அவர்களின் ஆசை இன்னும் நிராசையாகவே உள்ளது என்பது அறிய வில்லையா?.இப்படி எத்தனையோ .... கேள்விகள்?.கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இவற்றிற்குப் பதில் எப்பொழுது?.....யாரால் ...?.

நாம் என்ன செய்யப் போகிறோம்?.

இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டால் போச்சு என போய்க்கொண்டே இருந்தால் .....முடிவு.?.

தமிழ்ச் சமுதாயமே ....தேரிழுக்கத் தயாராகுங்கள்......ஒன்றாய்...இரண்டாய்....நான்காய்....ஊர்கூடி.

ஒரு பசுவின் மனு. கேளுங்க அய்யா.

ஒரு பசுவின் மனு.


ஒரு நாள் ஒரு கவிதையில் எனது கவிதை.

என்னைப்
பார்த்துத்தானே
கூறினீர்கள் ...
தாயை அம்மா என்று !

பெற்ற தாயே தன்
சிசுவுக்குப் பால்தர மறுக்கும்
இக்காலத்தில்-நான்
மறக்கவில்லையே உங்களின்
சிசுவுக்குப் பால் தர !

காய்ந்த தீவனம்,
வடிகட்டிய நீர்,
மிஞ்சிய சாதம்,
இப்படி உன்னில் எஞ்சியதையே
எனக்கு நீ அளித்தாலும்
உனக்கு நான் அளிப்பது
சுத்தமான கலப்படமில்லா பால் தானே !

என்னில் ஊசி மருந்து செலுத்தி
என் ரத்தத்தை உறிஞ்ச
எவர் கொடுத்தார் உனக்கு அதிகாரம்?
ஏனிந்த பேராசை !

என்னில் செலுத்தும்
ஒவ்வொரு ஊசியும் உன்னைப்
பெற்றவளின் மார்புக் காம்பில்
செலுத்துவதற்குச் சமம்.

நானாகக் கொடுத்தால்
பால்.
நீ ஊசியால் கறந்தால்-அது
என் ரத்தம்.

வேண்டாம் மகனே!
நானே விரும்பிக் கொடுக்கிறேன்
வாழும் வரை !

என்னை வீழ்த்தித் தான்
குடிப்பேன் என்றால் அது
பாலல்ல....விஷம் .....

Thursday, 21 January 2010

எந்த மனிதன் சம்மதிப்பான் ?

சம்மதமா ?

நிஜங்கள்
நேற்றல்ல..இன்றல்ல..
நாளையும் கூட
கசக்கும்.

மனித உறவுகள்
எப்போதும்
இப்படித்தான்.

வறண்ட குளம் விட்டோடும்
கொக்குகள்.

இதயம் திறந்து வைத்தால்
வெளி எங்கும்
நிறையும்..
மனித என்ன அழுக்குகளால்.

இதைக் கசக்கி
எரிந்து விட
எந்தக் கடவுளாலும் முடியாது.

முற்றாய்
முழு மனதாய் முடிவு செய்தால்
முழுவதையும் எரித்திடலாம்
மூடிப் புதைத்திடலாம்.

எந்த மனிதன்
முதலில்
இறக்கச் சம்மதிப்பான்.?



என்னையும் கொஞ்சம் பாருங்கோ

வணக்கமுங்க.முதன் முதலா நாங்க கவிதையோட வரோமுங்க.எங்களையும் உங்க கூட சேத்துக்குங்க.

விக்கல்

விக்கல் எடுக்கிறது
தண்ணீர் குடிக்க மனமில்லை.
ஏனெனில்
நினைப்பது நீயல்லவா..!
ஆதலால்
நிலைக்கட்டும் சில நிமிடங்கள்-இந்த
விக்கல்.