மன்னர்கள் காலத்தில்
மாதம் மும்மாரியாம்.
எங்களது காலத்தில்
வருடத்தில் மும்மாரி
வந்து போக வழியில்லை.
வடகிழக்குப் பருவக்காற்றும்
தென்மேற்குப் பருவக்காற்றும்
திசை மறந்து போனதோ?
எவர் வீட்டுப் பரணில்
பருவமழை படுத்துத் தூங்குகிறதோ?
பாழாய்ப் போன மழை
பருவத்தில் வருவதில்லை.
ஓடைகள் வறண்டு
ஊருணியும் காய்ந்து
கண்மாய்களின் கருவேல மரங்களும்
கருகியே நிற்கிறது.
'நூறு நாள் வேலை' யில்
தூர் வாரிய குளத்திலும்
தவித்த வாய்க்குத் தண்ணீரில்லை.
ஊர்குடிநீர் கிணறு வற்றி
வருடம் பல ஆயிற்று.
சாதிச் சண்டையில்
தலையை வெட்டிய மனிதர்கள்
கிணறு வெட்ட விரும்பவில்லை.
சொட்டுச் சொட்டாய் வந்துபோன
ஆழ்குழாய் கிணற்று நீரும்
வாய்தா கேட்டு வராமல் திரிகிறது.
ஊர்தோறும் தெருக்கள் தோறும்
அரசுக் கடைகளாம் மதுபானக் கடைகள்
அங்கு விற்கும் தண்ணீருக்கு
தட்டுப்பாடே இல்லையாம்
தவித்த வாய்க்குத் தண்ணீர் தர
அதுபோல் இலவசக் கடைகள்
அரசு எங்கள் ஊரில் திறக்காதோ?
தோ.அறிவழகன்

No comments:
Post a Comment